புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:48 IST)

நல்ல வருமானம்; ஆனாலும் ஆன்லைன் சூதாட்ட மோகம்! – இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

புழல் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அளவுக்கதிகமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் தினேஷ். இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் செங்குன்றம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

போதிய அளவு வருமானத்துடன் எளிமையாக வாழ்ந்து வந்த தினேஷுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் மீது மோகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது சம்பாத்திய பணத்தை சூதாட்டத்தில் இழந்தது மட்டுமல்லாமல், மேலும் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தினேஷ் மனைவி வீட்டில் இல்லாத சமயம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு சூதாட்டம் மட்டுமே காரணமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.