தவெகவில் செங்கோட்டையன்.. திமுகவில் ஓபிஎஸ்!.. தேர்தல் ஆதாயத்தால் காற்றில் பறக்கும் கொள்கைகள்!..
அரசியல் என்றால் கொள்கை இருக்க வேண்டும்.. அந்த கொள்கையை தாங்கிப் பிடித்து நிற்க வேண்டும்.. அந்த கொள்கையை பின்பற்ற வேண்டும்.. அந்த கொள்கைக்காகவே வாழ வேண்டும் என்றெல்லாம் முன்பு சொன்னார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அரசியல் செய்ய அரசியல் செய்ய தெரிந்திருந்தால் போதும் என்கிற நிலை உருவானது..
பெரும்பாலானவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லை.. அதிமுக திமுக போன்ற பெரிய கட்சிகளே சில நேரங்களில் ஆதாயத்திற்காக கொள்கையை சமரசம் செய்து கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. கடந்த ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் இருந்தபோது செந்தில் பாலாஜி ஊழல்வாதி.. திமுக ஆட்சி வந்ததும் அவர் சிறைக்கு போவார் என்றார். ஆனால், செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்தவுடன் அவர் புனிதராக மாறிவிட்டார்.
குறிப்பாக பதவி, ஆதாயம் என வரும்போது அரசியல்வாதிகள் நிறம் மாறி விடுகிறார்கள்.. கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள்.. சில நாட்களுக்கு முன்பு யாரை திட்டினார்களோ அவர்களை இன்று தூக்கி கொண்டாடி பேசுகிறார்கள்.. கேட்டால் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.. நண்பனும் இல்லை என சொல்கிறார்கள். அதிமுகவில் 50 வருடங்களுக்கு மேல் இருந்த செங்கோட்டையன் பழனிச்சாமி தன்னை கட்சியை விட்டு நீக்கியதால் விஜயின் தவெகவில் இணைந்தார்..
தவெகவின் கொள்கை பிடித்தா என்றால் அதுவெல்லாம் இல்லை... ஏனெனில் தவெகவுக்கு என்ன கொள்கை என்பது விஜய்க்கே தெரியாது.. இப்போதைக்கு, திமுகவை திட்டுவதுதான் தவெகவின் கொள்கையாக இருக்கிறது. தற்போது புதிய அரசியல் சக்தியாக விஜய் உருவாகி வருவதை புரிந்து கொண்டு அந்த கட்சிக்கு சென்றிருக்கிறார் செங்கோட்டையன்.. அவ்வளவுதான்..
அதேபோல்தான் 50 வருடங்களாக அதிமுகவில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று தன்னை திமுகவில் இணைந்து கொண்டிருக்கிறார். இத்தனை நாட்கள் அம்மா.. அதிமுக என்று பேசி வந்தவர் இனிமேல் தளபதி.. திமுக என பேச வேண்டும்.. அவரும் பேசுவார்.. அதற்கெல்லாம் சளைத்தவர் இல்லை ஓ பன்னீர்செல்வம்..
தளபதி சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார் பன்னீர்செல்வம்.. அவ்வளவுதான்.. இதுதான் அரசியல் கொள்கை.. அதேபோல்தான், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என சொல்லி வந்த டிடிவி தினகரன் அதே பழனிச்சாமி இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். பல வருடங்களாக பழனிச்சாமியை திட்டிவந்த டிடிவி தினகரன் அது பங்காளி சண்டை என்கிறார். அதோடு, அதிமுகவுடன் கூட்டணி பேசாமல் தொகுதி பங்கீடு குறித்து பாஜகவுடன்தான் பேசுவோம் என்கிறார்..
தேர்தல் மற்றும் பதவி ஆதாயம் வரும்போது அரசியல்வாதிகள் எப்படி நிறம் மாறுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..