1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (09:33 IST)

கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? ஆவேசத்துடன் வெளியேறிய நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்!

Seeman
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில ஒருங்கிணப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் விலகுவதாக அறிவித்துள்ளதுடன், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க சீமானின் நாம் தமிழர் கட்சி தயாராகி வரும் அதேசமயம் கட்சிக்குள் உள் பூசல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த நா.த.க நிர்வாகி கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியை விட்டு வெளியேறினார். அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ராஜா அம்மையப்பனும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் “அனைத்து நாம்‌ தமிழர்‌ உறவுகளே.. அனைவருக்கும்‌ வணக்கம்‌. கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன்‌ பயணித்த நான்‌ இன்றுடன்‌ நாம்‌ தமிழர்‌ கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்‌. நாம்‌ தமிழர்‌ கட்சியில்‌ இரண்டு தடவை சட்டமன்ற வேட்பாளர்‌ ஒருமுறை சேலம்‌ நாடாளுமன்ற வேட்பாளர்‌ ஆக என்னை நிறுத்தி எனக்காகவும்‌ தமிழ்‌ தேசியத்திற்காகவும்‌ உழைத்த என்‌ தம்பிகள்‌, தங்கைகளை விட்டு கனத்த இதயத்துடன்‌ பிரிகிறேன்‌. உங்களுடன்‌ நான்‌ பயணித்த காலங்கள்‌ எனது வாழ்வின்‌ முக்கியமான காலமாகவும்‌, இனிமையான வசந்த காலமாகவும்‌ என்னி மகிழ்ச்சி கொள்கிறேன்‌.

நான்‌ உங்களை விட்டு பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்‌, வருத்தமடைய செய்யலாம்‌ . ஆனால்‌ கட்சிக்குள்‌ நடக்கும்‌ சில விஷயங்களும்‌, சாதிபிரிவினைகளும்‌, சமூக படுகொலையையும்‌ கண்டு என்னால்‌ இதில்‌ பயணிக்க விருப்பவில்லை. பொதுக்குழு என்ற பெயரில்‌ வெற்று பக்கங்களில்‌ மாநில ஒங்கிணைப்பாளர்கள்‌ மாவட்ட தொகுதி செயலாளர்களிடம்‌ கையெழுத்து வாங்குவது, நான்‌ பயணிக்கும்‌ கட்சியில்‌ யார்‌ செயலாளர்?‌ யார்‌ பொருளாளர்‌? என்பதை அறியாமலும்‌, வெளிப்படுத்தாமலும்‌ பயணிக்க விரும்பவில்லை.


தேர்தல்‌ ஆணையத்தில்‌ பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல்‌ கட்சியின்‌ பொது செயலாளர்‌ என்று கூறப்படும்‌ கருப்பையா என்பவர்‌ யார்‌? கட்சிக்கு என்ன செய்தார்?‌ நீங்கள்‌ நிறுத்தியுள்ள வேட்பாளர்கள்‌ பற்றி எல்லாம்‌ உங்களுக்கு தெரியுமா ? வேட்பாளர்கள்‌ சிலரை தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்து உள்ளீர்களா ? கட்சிக்குள்‌ சாதி இல்லாமல்‌ செயல்பட முடியாதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல்‌ சில நாட்களாக தவித்து வருகிறேன்‌.

பாரதிமோகன்‌, திருமால்‌ செல்வன்‌ போன்றோர்‌ கட்சியின்‌ பொருளாளர்‌ ஆகவும்‌, துணை செயலாளர்‌ ஆகவும்‌ நியமித்து உள்ளதாக கூறப்படுவது உங்களுக்கு எல்லாம்‌ தெரியுமா ? கட்சியில்‌ அண்ணன்‌ விருப்பப்படி செயல்பாடுகள்‌ உள்ளதா? அண்ணன்‌ அருகில்‌ உள்ள மூன்று பேரை தவிர்த்து நீங்கள்‌ அண்ணனை சகஜமாக பார்க்கமுடிகிறதா? என்பதை தாங்கள்‌ அறிந்து கொள்ளுங்கள்.

 என்னதான்‌ எனக்கு வருத்தம்‌ இருந்தாலும்‌ என்னை சீமான்‌ அவர்கள்‌ 8 ஆண்டுகளாக என்னை கண்ணியமாக நடத்தி எனக்குரிய மரியாதையை எனக்கு கொடுத்து சிறப்பித்தமைக்கு என்றைக்கும்‌ நன்றிவுரைவோடு இருப்பேன்‌. தமிழ்‌ தேசியம்‌ ஒரு நாள்‌ வெற்றி பெரும்‌ போது மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்‌. வாழ்க தமிழ்‌ வாழ்க தேசியம்‌ வாழ்க நாம்‌ தமிழர்‌ கட்சி என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்து நாம் தமிழர் நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K