திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (21:24 IST)

குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பா.? பெண் அமைச்சருக்கு முதல்வர் கண்டனம்..!!

Stalin
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்ஐஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பில் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்றும் பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் நிச்சயம் நிராகரிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இதுபோன்ற பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 
இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்  என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.