வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (21:01 IST)

மோடிக்குதான் தூக்கம் தொலைந்து விட்டது..! அடிக்கடி தமிழகத்துக்கு வந்து புலம்புகிறார்..! டி ஆர் பாலு...

TR Balu
பிரதமர் மோடிக்குதான் தூக்கம் தொலைந்துவிட்டதாகவும், அதனால்தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போவதாகவும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.     
 
சேலத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  திமுக, இந்தியா கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், “வாரம்தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி, இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி ஏதும் இல்லாததால் வாய்ப்பு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் பாஜகவுக்குக் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே, உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது என்றும் அதனால்தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள் என்றும் டி.ஆர் பாலு விமர்சித்துள்ளார்.
 
கடந்த தேர்தல் காலங்களில் இந்தியப் பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்கு தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள் என்று டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
 
சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ், 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவு கூறுவது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர் என்று டி ஆர் பாலு குறிப்பிட்டுள்ளார். 
 
ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அதிமுகவினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி என்று டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
 
'குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?' என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப்படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து விடுவார் போல என்று அவர் கடுமையாக சாடினார்.
 
”திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்குத் தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பாஜக நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது என்று டி.ஆர் பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
 
சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பாஜக உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டபூர்வமாக ஆக்கிய கட்சி பாஜக. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சிபிஐ நீதிமன்றம் 2017-ல் விடுதலை செய்துவிட்டது.
 
அதன் பிறகும் திமுகவின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக் கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா? என்று டி.ஆர் பாலு கேள்வி எழுப்பி உள்ளார்
 
பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ’’பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா? மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது என்று டி.ஆர் பாலு விமர்சித்துள்ளார்.
 
"தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம்" என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்திய போது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ’’ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்க தொடங்கப் போகிறது” என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19-ம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது என்று  ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

 
ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பாஜகவின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக் கூடாது. மீறி, மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேச மாட்டார் என்று டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.