வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (14:07 IST)

உதயநிதிக்கு பிரம்மாண்ட பேனர்கள் : வாரிசு அரசியலில் திமுக?

உதயநிதிக்கு பிரம்மாண்ட பேனர்கள் : வாரிசு அரசியலில் திமுக?
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியை புகழ்ந்து வைக்கப்பட்ட பேனர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 
சமீபகாலமாக, திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக தொடர்பான அரசியல் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் தவறாமல் பங்கேற்கிறார். அதோடு, அவரை மூன்றாம் கலைஞர் என புகழ்ந்து உடன் பிறப்புகள் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவங்களும் நடந்தது. 
 
அதேபோல், கருணாநிதியின் மறைவை அடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில் உதயநிதி களம் இறக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது. ஆனால், குடும்ப அரசியல் என விமர்சிப்பார்கள் என கருதி அந்த முடிவை ஸ்டாலின் கைவிட்டு விட்டதாகவும், முதலில் திமுகவில் அவருக்கு ஒரு பதவியை கொடுத்துவிட்டு, பின்னர் தேர்தல் அரசியலுக்கு கொண்டு வரலாம் என ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் கூறப்பட்டது.
 
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உதயநிதியின் புகழ் பாடி வைக்கப்பட்ட பேனர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. உதயநிதி திமுகவின் உறுப்பினர் மட்டும்தான். அவர் எந்த பதவியிலும் இல்லை. வழக்கமாக கட்சி சார்பாக விழாவோ அல்லது பொதுக்கூட்டமோ நடைபெறும்போது கட்சி தலைமை, முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை வாழ்த்தி வாசகங்கள் அமைக்கப்பட்ட பேனர்கள் வைப்பது வழக்கம்தான். 
உதயநிதிக்கு பிரம்மாண்ட பேனர்கள் : வாரிசு அரசியலில் திமுக?

 
ஆனால், கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத உதயநிதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்மன்றம் சார்பில் கூட அந்த பேனர் வைக்கப்படவில்லை. மாறாக, காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர்களில் ‘வருங்கால வசந்த நாயகரே, தொண்டாற்ற பிறந்த தோழமையே’ என வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
 
ஸ்டாலினின் அனுமதி பெற்றுத்தான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து திமுக குடும்ப அரசியலை முன்னெடுக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.