பிரியாணிக்கு பாக்சிங்... பரோட்டாவுக்கு அரிவாள் : திமுக வழக்கறிஞர் அட்டூழியம்
ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கமால் அரிவாள் காட்டிய மிரட்டிய திமுக வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மருங்கூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்த ஒருவர் பரோட்டா சாப்பிட்டுள்ளார். அதன் பின் பணம் தர மறுத்து அங்கிருந்த ஊழியர்களை அரிவாள் காட்டி மிரட்டியுள்ளார். ஓட்டலில் இருந்த சில பொருட்களையும் அவர் அரிவாளால் சேதப்படுத்தியுள்ளார். இதனால், ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
இந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் அவரின் பெயர் சுதா அமர்சிங் என்பதும் அவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. மேலும், திமுகவின் வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளராக அவர் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் பிரியாணிக்காக யுவராஜ் என்பவர் கடை ஊழியர்களை தாக்கி, அந்த பஞ்சாயத்து ஸ்டாலின் வரை சென்று, அவர் நேரில் வந்து ஆறுதல் கூறிய நிலையில், தற்போது பரோட்டாவுக்கு திமுக வழக்கறிஞர் அரிவாள் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.