செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 டிசம்பர் 2017 (16:04 IST)

நாம் நிஜமாகவே கல்வி அறிவு பெற்றவர்களா?

வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை, காஞ்சிபுரத்தில் ஆசிரியை தாக்கியதால் மாணவன் படுகாயம், நெல்லை பள்ளியில் மாணவன் மர்ம மரணம், திருவள்ளுரில் பள்ளி கழிப்பறையில் வெறும் கையை பயன்படுத்தி கழிப்பறையை மாணவிகளை கொண்டு கழுவ செய்த தலைமை ஆசிரியை என இந்த வாரம் முழுவதும் பள்ளி சார்ந்து வந்த செய்திகள் ஏராளம். 


 
ஒவ்வொரு நாளும் இப்படி செய்திகள் நம்மை வந்து அடைந்துக் கொண்டே தான் இருக்கின்றன. அது தொடர்ச்சியாகும் பொழுது சில நேரங்களுக்கு அதன் மீது கவனம் குவிப்போம். அதன் பிறகு, கடந்து சென்று விடுவோம். அதிலும், ஊடக கண்களுக்கு அகப்படாமல் தினம் தினம் நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம். 
 
இந்த அரசும், சமுதாயமும் அனைத்திற்கும் தீர்வாக முன் மொழிவது கல்வியைதான். குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளுக்கும் தீர்வும் பள்ளிக் கூடங்கள் என எல்லாருமே நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதனை குழந்தைகள் விரும்புகிறார்களா என்றால் அது ஐயத்திற்கு இடமான ஒன்றுதான். ஏனெனில், இன்று பெற்றோர்களும், ஆசிரியர்களுமே மிக பெரும் வன்முறையாளர்களாக குழந்தைகளால் பார்க்கப்படுகிறார்கள். சந்தேகம் இருந்தால் உங்களை யார் என்றே தெரியாத குழந்தையுடன் பேசி பாருங்கள்.அவர்களின் பெற்றோர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும்  குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போவார்கள். 
 
எதிர்காலம், சம்பளம், சொகுசு வாழ்க்கை, பணி நிரந்தரம், சொந்த  வீடு எனும் எந்த அர்த்தமும் இல்லாத காரணங்களுக்காக தன் நிகழ் காலத்தை முற்றிலும் இழந்துக் கொண்டிருக்கும் நடுத்தர குடும்ப குழந்தைகள் ஒருபுறம் என்றால், குடும்பத்தின் முதல் பட்டதாரி, நன்றாக படித்து, வேலைக்கு சென்று, சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்து, பெற்றோர்களை பராமரித்து வாழ வேண்டிய நிர்பந்தம் கொண்ட ஏழை குழந்தைகளின் கொன்று புதைக்கப்படும் மனிதம் ஒரு புறம் என்று இந்த பூமியின் எதிர்கால மனித சமுதாயமே திக்கு திசை தெரியாமல், தன்னை கொன்று, தன் நேரத்தை கொன்று, அன்பை கொன்று என அனைத்தையும் கொன்று விட்டு நிச்சயமில்லாத எது எதற்கோ தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் இந்த குழந்தைகள்.
 
உலகம் முழுவதும் இருந்து வேலையில்லா  திண்டாட்டமும், வறுமையும், வேலை பளுவின் காரணமாக மன அழுத்தமும், சுற்று சூழல் மாசுபாடும், வன விலங்குகளின் அழிவும் அதிகரித்து வருவதை நாம் கண் ஊடாக பார்க்க முடிகிறது. அறிஞர்களும் ஊடகங்களும் உலக அழிவை கண்டு கவலையோடு செய்தி வெளியிடும் இந்த நேரத்தில் நாம் பெரும் பாய்ச்சலை நமக்காக  நாம் செய்ய வேண்டியது இருக்கிறது. ஏனெனில், இயற்கைக்கு அதை பாதுகாத்துக் கொள்ள  நன்றாக தெரியும். நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளத் தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தான் இங்கு கேள்வி?


 

 
நம் பள்ளிக் கூடங்கள் தான் இதற்கான முன்னெடுப்பை செய்ய வேண்டும். அதுதான் அதன் கடமையும் கூட. ஆனால், அது செயல்படும் திசையை நோக்கினால், அது இன்னும் விரைவாக மனித சமுதாயத்தின் அழிவை நோக்கி முன்னெடுப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக, இந்த பொது தேர்வு என்பதே ஒரு கேலிக்குரிய விஷயம். இங்கிருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனி பாடத் திட்டம் தேவையாய் இருக்கிறது. திருநெல்வேலிக்கு தேவையான பாட திட்டம் வேறு, தூத்துக்குடிக்கு தேவையான பாடத்திட்டம் வேறு.   அருகருகே இருக்கும் மாவட்டத்திற்கே இந்த நிலை என்றால் நீலகிரிக்கும் நெல்லைக்கும் என்ன சம்பந்தம்? ஏன், நெல்லையிலுமே பாபநாசத்தில் வளரும் குழந்தைக்கான கல்வி முறையும் நெல்லை டவுனில் வளரும் குழந்தைக்கான கல்வி முறையும் வேறு வேறாக தேவைப்படுகிறது. இதில் எப்படி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பொது தேர்வை வைத்து மாணவர்களை தகுதி நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை. 
 
ஒரு குழந்தை வளரும் சூழல், காலநிலை, வாழ்க்கை முறை சார்ந்த கல்வி முறையும் அதன் தாய் மொழி சார்ந்த பயிற்றுவிக்கும் முறையும் இருந்தால் அதன் கல்வி வளர்ச்சி எப்படி இருக்கும்? தனக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத பாடமுறையை பயின்றால் கல்வியில் வளர்ச்சி அடையுமா? 
 
செழுமையடையாத பாடத்திட்டங்கள் பயின்ற ஒரு குழந்தை தானே நாளை ஆசிரியராகவும் அதிகாரியாகவும் வந்து அமர போகிறது! பின், மனிதத்தையும், அன்பையும் எங்கிருந்து அவர்களிடம் எதிர்பார்க்கிறீர்கள்? குழந்தைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அதிகப்படியான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் நாம் அதனை பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையை அவர்களுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு ஒதுக்கினாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். அந்த இரண்டு மணி நேரமாவது அவர்களுக்கு பிடித்தது போல் வாழ்ந்து, அவர்களுக்கு பிடித்ததை கற்றுக் கொள்ளட்டுமே!


 

 
அடுத்து, பாடங்களின் எண்ணிக்கையை குறைப்பது அவசியம். ஆங்கிலம் விருப்பப்பாடமாக இருக்கலாம். அவர்கள் அந்த  மொழியை விரும்பினால் மட்டுமே படித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மேலும், தற்சார்பு வாழ்க்கை முறைக்கான கல்வியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதாவது , தங்கள் வாழ்க்கையில்  பயன்படுத்தும் பொருட்களின் முக்கியமானவற்றை தானே உருவாக்கிக் கொள்ளும் கல்வி முறையை அவர்களுக்கு அளிக்க வேண்டியது அவசியம். பன்னிரண்டு வருட கல்வி பயிலும் காலத்தில், தனக்கு தேவையான உணவையும், மருத்துவத்தையும் கூட தானே தயாரித்துக் கொள்ள சொல்லி தராத கல்வி முறையை பயின்று அவர்கள் என்ன அடைந்து விடப் போகிறார்கள் என தெரியவில்லை.   வேலை வாய்ப்பு, பணி நிரந்தரம், ஓய்வு, ஆடம்பரம் போன்ற அனைத்தையும் அவர்கள் பொய்யென அறிந்துக் கொள்ளும் மனநிலையை அதுவே உருவாக்கும்.         
 
அறிவியலும் கணிதமும் முழுமையாக மனப்பாட கல்வியில் இருந்து வெளியேற வேண்டும். செய்முறை கல்வி என்ற சாக்கு போக்கு எல்லாம் இந்த குழந்தைகளுக்கு தேவையே இல்லை. சம காலத்தில் அறிவியல் உலகம் முழுவதும் எப்படி இருக்கிறது? அது மனித  வாழ்விற்கு எந்த அளவிற்கு பயன்படுகிறது? அதை இன்னும் எப்படி பயன்படுத்தலாம் என்ற ஆய்வை செய்ய ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக் காலத்திலே ஆய்வு செய்ய சொல்லி தருவது மிக அவசியம். மனித வாழ்வின் மன நெருக்கடியில் இருந்து தப்பி பிழைக்க, ஆரோக்கியமான வாழ்வினை அவன் தேர்ந்தெடுக்க பாலியல் கல்வியும் மன நல கல்வியும் முக்கிய பங்காற்றும்.  
 
ஊடக கல்வி முக்கியமாக மின்னணு ஊடக கல்வி, பள்ளி காலத்திலே தரப்படுவது மிக அவசியம். ஊடகங்களே இன்று மனித வாழ்க்கை முறையை உருவாக்கும் சக்தியாக இருக்கின்றன. அது மிக பெரும் வணிக வட்டத்தில் சிக்கி இந்திய பொருட்களை சந்தைப்படுத்துவதே இயலாத காரியமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் வணிகத்தில் ஊடுருவி இன்று நம்மையே வழிநடத்தும் பெரும் சக்தியாக வளர்ந்து நிற்கின்றன. ஊடக விளம்பரங்கள் மக்களின் வாங்கும் முடிவை, முடிவு செய்யாது என்று நிலை என்று உருவாகிறதோ அன்று தான் ஊடகங்கள் மக்களுக்கான ஊடகமாக செயல்படும்.
 
இவை எல்லாம் சாத்தியமாக்க முடியும். ஆனால், அதற்கு நமக்கு தேவை விழிப்புணர்வு.இப்படி பாட முறையை உருவாக்க வேண்டி நம் அரசை நிர்பந்தப்படுத்த வேண்டியது நம் கடமை. இல்லை என்றால், இப்படி பாடம் நடத்தும் பள்ளிக் கூடங்களை உருவாக்குபவர்களுக்கு உறுதுணையாக இருந்து, பிள்ளைகளை அங்கு சேர்த்து ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை. நாம் நகர்ந்தால் தானே சமுகம் நகரும்.
 
- சந்தோஷ் ஸ்ரீ