ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (17:25 IST)

விஜயகாந்த் செய்த மக்கள் பணிகளை மறைக்க முயற்சி.! திமுகவை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்.!! பிரேமலதா அறிக்கை.!

premalatha
ரிஷிவந்தியம்‌ தொகுதியில்‌ கேப்டன்‌ செய்த மக்கள்‌ பணிகளை மறைக்க நினைக்கும்‌ தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர்‌  பிரேமலதா விஜயகாந்த்‌ கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக  பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன்‌ அவர்கள்‌ 2011ஆம்‌ ஆண்டு ரிஷிவந்தியம்‌ சட்டமன்ற தொகுதியினுடைய உறுப்பினராக மக்களின்‌ ஏகோபித்த ஆதரவால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டார்‌. தேர்தலில்‌ வேட்பாளராக நின்றபொழுது அந்த தொகுதி மக்கள்‌ தங்களது. அடிப்படை தேவைகளையும்‌, நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படியும்‌ கேப்டன்‌ அவர்களிடம்‌ கேட்டுக்கொண்டார்கள்‌. அப்போது வெற்றிபெற்றால்‌ கண்டிப்பாக அனைத்து தேவைகளையும்‌ நிறைவேற்றித்‌ தருவதாக வாக்குறுதியும்‌ அளித்தார்‌. 
 
அதனடிப்படையில்‌ அரைநூற்றாண்டுக்கும்‌ மேலாக வளர்ச்சியடையாத அந்த ரிஷிவந்தியம்‌ தொகுதியில்‌ மக்களின்‌ தேவைகள்‌ அறிந்து மக்கள்‌ வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத்‌ தொடங்கினார்‌. சாலை வசதிகள்‌, குடிநீர்‌ வசதிகள்‌, அங்கான்வாடி கட்டிடங்கள்‌, நியாயவிலை கடைகள்‌ என அடுக்கடுக்காக மக்களின்‌ அனைத்து கோரிக்கைகளையும்‌ நிறைவேற்றினார்‌. அனைத்திற்கும்‌ மகுடம்‌ சூட்டுவதுபோல்‌ அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அந்த தொகுதி மக்களின்‌ பிரதான கோரிக்கையாக இருந்த மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின்‌ குறுக்கே இருந்த தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம்‌ அமைக்கவேண்டும்‌ என்ற அந்த பிரதான கோரிக்கையை எந்த அரசும்‌ நிறைவேற்றாத நிலையில்‌, கேப்டன்‌ அவர்கள்‌ அந்த பாலத்தை அமைத்து தரவேண்டும்‌ என்று முழுமூச்சுடன்‌ டெல்லிவரை சென்று பாரத பிரதமரை சந்தித்து மத்திய சிறப்பு நிதியாக ரூபாய்‌ 22 கோடியை பெற்று வந்து அந்த உயர்மட்ட பாலத்தை அமைத்தார்‌. 
 
திருவண்ணாமலையில்‌ இருந்து தஞ்சாவூர்‌ வரை செல்லுகின்ற பழைய தஞ்சாவூரான்‌ சாலை என புகழ்பெற்ற அந்த சாலையில்‌ மழை மற்றும்‌ வெள்ள காலங்களில்‌ மக்கள்‌ செல்ல முடியாமல்‌ போக்குவரத்தே தடைபட்டு போகும்‌ அவலநிலை இருந்தது. அந்த அவலநிலையை போக்கியவர்‌ புரட்சி கலைஞர்‌ கேப்டன்‌ அவர்கள்‌ என்பதை கள்ளக்குறிச்சி மாவட்டமே அறியும்‌. அதேபோன்று ரிஷிவந்தியம்‌ தொகுதியில்‌ முக்கியமான பேருந்து நிறுத்தங்களில்‌ மழை மற்றும்‌ வெயில்‌ காலங்களில்‌ பேருந்துகளில்‌ ஏற நிற்பதற்கு இடமில்லை என கேப்டன்‌ அவர்களிடம்‌ மக்கள்‌ கேட்ட காரணத்தினால்‌ கேப்டன்‌ அவர்கள்‌ பல பேருந்து நிறுத்தங்களில்‌ பயணியர்‌ நிழற்குடைகளை அமைத்தார்‌. அப்படி அமைக்கப்பட்ட பயணியர்‌ நிழற்குடைகளில்‌ மணலூர்பேட்டை மற்றும்‌ மாடாம்பூண்டி கூட்டு ரோடும்‌ அடங்கும்‌. 
 
சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல்‌ காரணமாக, மாடாம்பூண்டி கூட்ரோட்டில்‌ ரெளண்டானா அமைக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்‌ அங்கிருந்த நிழற்குடையை அகற்ற முற்பட்டபோது, தேமுதிகவினரும்‌, பொதுமக்களும்‌ அதைத்‌ தடுத்தனர்‌. அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்‌ தடுத்தவர்களிடம்‌ மீண்டும்‌ அருகாமையில்‌ நிழற்குடையை கண்டிப்பாக அமைத்து தருகிறோம்‌ என உறுதியளித்தனர்‌. ஆனால்‌ இன்றுவரை அதை அமைத்துதரவில்லை. 
 
இந்தநிலையில்‌ மணலூர்பேட்டையில்‌ கேப்டன்‌ அவர்கள்‌ அமைத்திருந்த பயணியர்‌ நிழற்குடையையும்‌ கால்வாய்‌ கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்‌ அதை எடுக்க முற்பட்டபோது, தேமுதிகவினரும்‌, பொதுமக்களும்‌ திரண்டு அதை தடுத்துநிறுத்தினர்‌. அப்போதும்‌ நெடுஞ்சாலைத்‌ துறை அதிகாரிகள்‌, கீழே கால்வாய்‌ அமைக்கப்பட்டு அதன்மேலே கான்கிரிட்‌ போட்டு மூடிவிட்டு அதேஇடத்தில்‌ மீண்டும்‌ பயணியர்‌ நிழற்குடையை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்காக நிச்சயமாக அமைத்துதருகிறோம்‌ என உறுதியளித்தனர்‌. கால்வாய்‌ வேலை முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள்‌ ஆகியும்‌ இதுவரை அந்த நிழற்குடையை அமைக்க அதிகாரிகள்‌ முன்வரவில்லை. 
 
இதை கண்டித்து கடந்த டிசம்பர்‌ மாதம்‌ தேமுதிக சார்பில்‌ கண்டன ஆர்ப்பாட்டமும்‌ நடத்தப்பட்டது. அப்போது காவல்துறையினர்‌ தலையிட்டு தேமுதிகவினரிடம்‌ பேசி கண்டிப்பாக அங்கே நிழற்குடை அமைக்க அதிகாரிகளிடம்‌ பேசுகிறோம்‌ என காவல்துறையினர்‌ சமாதனம்‌ செய்தனர்‌. ஆனாலும்‌ இன்றுவரை பயனியர்‌ நிழற்குடை அமைக்க எந்த நடவடிக்கையும்‌ அரசால்‌ எடுக்கப்படவில்லை. இதை பார்க்கின்ற பொழுது தலைவர்‌ கேப்டன்‌ அவர்கள்‌ ரிஷிவந்தியம்‌ தொகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த வியக்கத்தக்க மக்கள்‌ பணிகளை மக்களிடம்‌ இருந்து மறைக்கும்‌ விதமாக, அவருடைய அந்த பணிகளை அழிக்கும்‌ விதமாக அங்கு இருக்கின்ற திமுகவினரின்‌ தூண்டுதலால்‌ அரசு அதிகாரிகள்‌ செயல்படுவதாக மக்களே குற்றம்சாட்டுகிறார்கள்‌. 
 
முதலில்‌ மாடாம்பூண்டி கூட்ரோடு அடுத்தது மணலூர்பேட்டை என கேப்டன்‌ அவர்களின்‌ அடையாளங்களை அழிக்கத்‌ துடிக்கும்‌ அங்குள்ள திமுக வினரையும்‌, அவர்களுக்கு துணை போகும்‌ அரசு அதிகாரிகளையும்‌ வன்மையாக கண்டிக்கின்றேன்‌. மேலும்‌ இதை கண்டித்து வருகின்ற 20.01.2024 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில்‌ உண்ணாவிரத போராட்டம்‌ நடைபெறும்‌ என்று தேமுதிக பொதுச்செயலாளர்‌  பிரேமலதா விஜயகாந்த்‌ தெரிவித்துள்ளார்.