செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (22:41 IST)

இந்து கோயில் மீது பாகிஸ்தானில் தாக்குதல்: மத நிந்தனை வழக்குப்பதிவு

பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் இருக்கும் ஓர் இந்து கோயில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத கலவரக்காரர்கள் மீது மத நிந்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கராச்சியில், லீ மார்கெட் பகுதியில் இருக்கும் சீத்தல் தாஸ் வளாகத்தில் இருந்து வெளியே வந்த, ஒரு விலங்கின் மீது தகாத வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்ததே இந்தப் பிரச்சனைக்கு காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சீத்தல் தாஸ் வளாகம் பாகிஸ்தானை விட்டு வெளியேறியவர்களின் சொத்துகளை நிர்வகிக்கும் வாரியம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

'வெளியேறியவர்கள் அறக்கட்டளை சொத்துகளுக்கான வாரியம்' எனும் இந்த வாரியம் பிரிவினையின்போது பாகிஸ்தானை விட்டு வெளியேறிய இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிக்கிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, சீத்தல் தாஸ் வளாகத்தை சுமாராக 400 பேர் சூழ்ந்து கொண்டதாக, அந்த பகுதியில் வாழும் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர், சீத்தல் தாஸ் வளாகத்தினுள் அத்துமீறி, உள்ளே சென்று மகேஸ்வரி சமூகத்தின் கோயிலைச் சேதப்படுத்தினர் என்று அவர் கூறியுள்ளார். கோயிலின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்து கோயில் தாக்குதலுக்கு உள்ளது தொடர்பான வீடியோக்கள், பாகிஸ்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக, பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, முன் எச்சரிக்கையாக சீத்தல் தாஸ் வளாகத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விவரம் அறிந்த உடன், சம்பவ இடத்துக்கு காவலர்கள் விரைந்து இருக்கிறார்கள். பாகிஸ்தான் காவல் துறையினர், கடவுள் சிலைகள் அவமதிப்பு சட்டத்தின் கீழ், அடையாளம் காணப்படாத கலவரக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். நேபியர் காவல் நிலையத்தில், ஒரு காவலரின் புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த காவலர், சீத்தல் தாஸ் வளாகத்தில் தாக்குதல் நடந்த போது சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.

இந்து கோயில் மீது பாகிஸ்தானில் தாக்குதல்: மத நிந்தனை வழக்குப்பதிவு

பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லால் மஹாலி, சிந்த் மாகாணத்தில் மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு அதிகரித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்.

பிபிசி தரப்பில் இருந்து சிந்து மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் முர்தாசா வஹப்பை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஏற்கனவே, இதே சீத்தல் தாஸ் வளாகத்தில் உள்ள இந்து கோயில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு வீடியோவில், சேலை உடுத்தி இருக்கும் ஒரு பெண், சேதத்தை ஏற்படுத்த வேண்டாம் என கலவரக்காரர்களிடம் கெஞ்சுவதைப் பார்க்க முடிகிறது. மற்றொரு வீடியோவில் பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதோடு மற்றும் சில இந்து கடவுள் சிலைகள் கீழே விழுந்து கிடக்கும் புகைப்படங்களும் வைரலாக பரவிக் கொண்டு இருக்கின்றன.

இன்னொரு வீடியோவில், ஒரு சிந்தி மொழி பேசும் நபர் "பாருங்கள், அவர்கள் எங்கள் கோயிலை சேதப்படுத்திவிட்டார்கள். இதுதான் பாகிஸ்தானில் இந்துக்களின் நிலை" என வருத்தப்படுகிறார்.

ஒரே மாதத்தில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது மூன்றாவது முறை. அரசு இந்து கோயில்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என ரேகா மகேஸ்வரி என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்