1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (00:08 IST)

தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ளார்': முகவரியை வெளியிட்ட பாகிஸ்தான்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கிளிஃப்டன் பகுதியில் சௌதி மசூதிக்கு அருகே இருக்கும் 'ஒயிட் ஹவுஸ், எனும் வீட்டில் அவர் இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
 
கராச்சி நகரில் உள்ள ஹவுசிங் அத்தாரிட்டி பகுதியில் இருக்கும் முப்பதாவது தெருவில் 37வது எண் வீடு மற்றும் கராச்சியில் உள்ள நூர்பாத் பகுதியிலுள்ள மலைப்பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவும் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமானவை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான பொருளாதார தடை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள 88 தீவிரவாத அமைப்புகள் குறித்த விவரங்களை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. அதில் மேற்கண்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து இயங்கும் ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் திட்டத்தை இறுதி செய்ய வேண்டும் என்று ஜூன் 2018 காலக்கெடு விதித்திருந்தது.
 
ஆனால் கோவிட்-19 தொற்றின் காரணமாக பாகிஸ்தான் அரசுக்கு கால அவகாசம் மேலும் அதிகரிக்கப்பட்டது.
 
தாவூத் இப்ராஹிம்பட மூலாதாரம்,
 
இதன்படி ஆகஸ்ட் 18ஆம் தேதி 2008இல் நடந்த மும்பை தாக்குதல் மற்றும் ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பிட்டு பாகிஸ்தான் அரசு குறிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இத்தகைய குறிப்பாணை 2019 நவம்பரிலும் வெளியிடப்பட்டது.
 
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சுமார் 700 பேர் காயமடைந்தனர்.
 
ஊடகச் செய்திகளின்படி 59 வயதாகும் தாவுத் இப்ராஹிம் தீவிரவாதம், பணம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.