புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (10:31 IST)

எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?- 31 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போல்லோவுக்குக் கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது அப்போல்லோ நிர்வாகத்திடம் எம்ஜிஆர் 1984-ல் அனுமதிக்கப்பட்ட போது அளித்த சிகிச்சை விவரங்களைக் கேட்டுள்ளது.

ஜெயலலிதா 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்த போதும், மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 75 நாட்களும் மருத்துவர்கள், சசிகலா தவிர வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

அதனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மற்றும் அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.

அதேப்போல, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

ஓராண்டாக்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு வரும் ஆணையத்தின் விசாரனைக் காலம் வரும் அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைவதை அடுத்து தங்களுக்கு மேலும் மூன்று மாதக்காலம் அவகாசம் வேண்டுமென ஆணையம் சமீபத்தில் கேட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1984-ல் உடல்நிலை சரியில்லாத போது அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டே அதன் பின் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது மற்றும் அவரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கு எடுத்துக் கொண்ட வழிமுறைகள் என்ன என்பது ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லி ஆணையம் கேட்டுள்ளது.

எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கேட்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஒப்பிட்டுப் பார்க்கவே அந்த ஆவணங்களை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாதற்கான காரணங்களையும் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.