திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (12:22 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! ரவுடி நாகேந்திரனின் மகன் கைது.! காங்கிரசில் இருந்து நீக்கம்..!

Arrest
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பகுஜன் சமாஜ் கட்சியின்  மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குன்றத்துரைச் சேர்ந்த திருவேங்கடம் விசாரணையின் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை பாஜக முன்னாள் பிரமுகர் அஞ்சலை உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பா?
 
மேலும் இந்த வழக்கில் கூலிப் படைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா என்றும் விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

அஸ்வத்தாமன் கைது:
 
இந்நிலையில் ரவுடி நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அவரிடம் இரண்டு நாட்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
காங்கிரசில் இருந்து நீக்கம்:
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  அஸ்வத்தாமன், காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட  அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.