திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (16:07 IST)

பெட்டிக்கடையில் மாமூல் கேட்டு தகராறு.! 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை..!

jail
பெட்டிக்கடை உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் மாமூல் கேட்டு தகராறு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர், பாபு. இவரிடம் கடந்த 2022ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி மற்றும் யுவராஜ் ஆகியோர், காவல்துறைக்கு அபராதம் செலுத்தி இருசக்கர வாகனத்தை மீட்பதற்காக ரூ.5 ஆயிரம் மாமூல் கேட்டு ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
 
இதில், பணத்தை தர மறுத்த பாபுவை தாக்கியதுடன், கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து, பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு, தங்களை யாராவது பிடிக்க முயன்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பாபு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், வழக்கு விசாரணையின்போது, தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் விசாரித்தார். இதில், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பகவதிராஜ் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

அனைத்தை தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “பாலாஜி மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 
மேலும், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் மீதான குற்றத்தை அரசுத் தரப்பில் நிரூபிக்கப்படாதாதால் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.