கலை, அறிவியல் கல்லூரிகளில் தனித்தனியாக விண்ணப்பம் இல்லை: ஒற்றைச் சாளர முறை அமல்?
மருத்துவம், பொறியியல் படிப்புகள் போல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரிகளிலும் தனித்தனியாக விண்ணப்பிக்கும் செய்யும் முறைக்கு மாற்றாக Single Window System கீழ் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் நடத்தப்பட உள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில் 06.03.2024 அன்று கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறை (Single Window System), போன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணக்கர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின், அக்கூட்டத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ளஅரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் (Single Window System) பின்பற்றுவது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதற்கிணங்க மேற்காண் பொருள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க ஏதுவாக குழு அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran