செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (17:12 IST)

ஊட்டச்சத்தை உறுதி செய்ய இதை செய்தாலே போதும்: முதல்வருக்கு அண்ணாமலை அறிவுரை..!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஊட்டச்சத்து குறித்து சமீபத்தில் தனது டுவிட்டரில், ‘பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்குச் செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம்தான் #ஊட்டச்சத்தை_உறுதிசெய்! என்று கூறியிருந்தார்.
 
இந்த பதிவுக்கு அண்ணாமலை கூறியதாவது: தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்  அவர்கள், ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற ஒரு திட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். 
 
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தை உறுதி செய்ய வேண்டுமானால், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதுமானது. புதியதாகப் பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.
 
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில்  தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, ரூ.2936 கோடி ரூபாய். சராசரியாக வருடத்திற்கு ஐம்பது லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள். 
 
ஒரு புறம், பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை உட்பட தரமற்ற உணவு வழங்கிக் கொண்டு, மற்றொரு புறம், அலங்கார வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுவதை எப்போது நிறுத்தும் திமுக?
 
Edited by Mahendran