1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (14:26 IST)

நிறைய தங்க கட்டி வெச்சிருக்கோம்; கம்மி ரேட்தான்! – வசமாக சிக்கிய மோசடி தம்பதிகள்!

விருதுநகரில் தங்க புதையல் கிடைத்துள்ளதாக மோசடி செய்ய முயன்ற தம்பதிகளை போலீஸார் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வசித்துவரும் செந்தில் குமார், அப்பகுதியில் தனது மனைவியோடு மெடிக்கல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக அவர்களது மெடிக்கலுக்கு தம்பதியினர் ஒருவர் அடிக்கடி மருந்துகள் வாங்க வந்துள்ளனர். முக்கியமாக செந்தில்குமார் மனைவி மகாலட்சுயோடு அவர்கள் நட்பாக பேசி பழகியுள்ளனர்.

இந்நிலையில் ஒருநாள் தாங்கள் மதுரை அருகே தோண்டும் பணி செய்து வருவதாகவும் அங்கு தங்க புதையல் கிடைத்ததாகவும் அதை குறைந்த விலைக்கு விற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஈர்க்கப்பட்ட செந்தில்குமார் முதலில் தங்க கட்டிகளை காட்ட சொல்லியுள்ளார். ஆனால் அவை தங்கம் போல தெரியாததால் வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் மகாலட்சுமி மெடிக்கலில் இருந்தபோது மீண்டும் பேச வந்த அந்த தம்பதியினர் மிகவும் குறைந்த விலைக்கு டீல் பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மகாலட்சுமி போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மர்ம தம்பதிகளை விசாரித்தபோது அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும் தங்க கட்டி என முலாம் பூசிய பித்தளை கட்டிகளை காட்டி பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.