செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு இப்போ பாஜக எதிரியா? – அதிமுகவை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை எதிரி என அதிமுக பிரமுகர்கள் பேசி வருவது குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தமிழக கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்துள்ளதால் மும்முனை போட்டி நிலவும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ளது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து பிரிந்தது முதல் பாஜக மீதான விமர்சனங்களை அதிமுக பிரபலங்கள் முன்வைத்து வருகின்றனர். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் மாநில அரசின் நலன் பாதிக்கப்படுவதாக பேசியிருந்தார். சமீபத்தில் சந்திப்பு ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பாஜகவை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக தங்களை பாஜக எதிரியாக காட்டிக் கொள்வது குறித்து பேசியுள்ள தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ஒரேநாளில் பாஜகவுக்கு நாங்கள் எதிரி என அதிமுகவினர் நாடகம் போடத் தொடங்கியுள்ளனர். ஆனால் வேளாண் சட்டம், நீட் தேர்வை பாஜக அரசு கொண்டு வந்தபோது அதை ஆதரித்தது அதிமுக அரசுதான். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அதிமுக எம்.பிக்கள் ஆதரித்ததால்தான் அது சட்டமாகவே நிறைவேறியது. அதிமுகவின் போலி நாடகங்களை தாண்டி நாடாளுமன்ற தேர்தலில் நமது பிரச்சாரம் வெற்றி பிரச்சாரமாக அமைய வேண்டும்” என திமுகவினரிடையே உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
Edit by Prasanth.K