திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (15:08 IST)

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது.! சின்னம் தொடர்பான விவகாரத்தில் தான் தலையிட முடியும்.! தேர்தல் ஆணையம்..!!

highcourt
அதிமுக-வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுக-வின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை எனவும், கட்சியின் சட்ட திட்டங்களின் படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டுமெனவும், அதிமுக சார்பில் கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
 
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் அந்த புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை எனவும், அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஆஜராகி உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், சர்வாதிகார முறையில் நடைபெற்றது என்பதால், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என குறிப்பிட்டார்.
 
தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துவிட்டதாகவும், உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தான் தலையிட முடியும் என தெரிவித்தார்.

 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பிரதிவாதியாக அதிமுக-வை மனுதாரர் சேர்க்கவில்லை என்றும், உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட  உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபட்டுவிட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் கூறி, சிவில் நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.