1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:29 IST)

அவங்க வேணாம்ணே.. நம்ம கூட்டணிக்கு வாங்க!? – பாமகவுக்கு தூண்டில் போடும் அதிமுக?

Edappadi Ramadoss
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தீவிர செயல்பாடுகளில் இறங்கியுள்ள நிலையில் கூட்டணி பாஜகவுடனா? அதிமுகவுடனா? என்ற ஆலோசனையில் பாமக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் முதலாவதாக கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்துள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் பல எந்த கட்சியோடு கூட்டணி சேர்வது என்பது குறித்த ஆலோசனையில் உள்ளன. அதிமுகவில் கேட்கும் சீட் கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதால் பலரும் அதிமுக அலுவலகம் பக்கமே செல்லவில்லை என்று தெரிகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கணிசமான தொகுதிகளும், ராஜ்யசபா எம்.பி சீட்டும் கிடைக்கும் என்பதால் பல அரசியல் கட்சிகளும் பாஜக கூட்டணியை விரும்புகின்றன.

இந்நிலையில் பாமகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்க இருந்த நிலையில் கூட்டணி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வருகிறதாம். கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டு அன்புமணி ராமதாஸ் எம்.பியாக ராஜ்யசபா சென்றார். ஆனால் ராஜ்யசபா வருகைப்பதிவில் அன்புமணி பெரும்பாலும் ஆப்செண்ட்தானாம். இந்நிலையில் இந்த முறையும் ராஜ்யசபா சீட் கேட்பதால் பாஜக தரப்பில் பலமான யோசனை இருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிகவும் கூட்டணிக்கு இணங்கி வரும் நிலையில் அவர்களும் ராஜ்யசபா சீட்டைதான் முக்கியமாக கேட்கிறார்கள். அடுத்தடுத்து உள்ள வேறு சில கட்சிகளும் ராஜ்யசபா சீட் கேட்டு அடம்பிடிக்காத குறைதான் என கூறப்படுகிறது அரசியல் வட்டாரத்தில்..



எல்லா கட்சிகளும் ராஜ்யசபா சீட்டை குறிவைத்தே வருவதால் கூட்டணியில் பாஜகவும் இறுக்கம் காட்டி வருகிறது என பேசிக் கொள்ளப்படுகிறது. இதை பயன்படுத்தி பாமகவை அதிமுக கூட்டணியில் இணைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில்தான் தைலாபுரம் வீட்டில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.


பாமகவுக்கு வாக்கு வங்கி பலமாக உள்ள தொகுதிகளை ஒதுக்க தயாராக உள்ளதாகவும் ராஜ்யசபா எம்.பியாக அல்ல, மக்களவை எம்.பியாகவே நாடாளுமன்றம் செல்லலாம் என்றும் டீல் பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. பாஜகவிற்கு பாமக வைத்துள்ள டீலிங்கிற்கு பாஜகவின் ரியாக்‌ஷன் என்ன என்பதை பொறுத்து கூட்டணிக்கான பச்சைக்கொடி அதிமுக பக்கம் திரும்பும் சாதகங்களும் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இந்த மாத இறுதிக்கும் தமிழகத்தில் கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K