சி.வி.சண்முகம் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம்– அக்ரி கிருஷ்ணமூர்த்தி அழைப்பு!
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், இரு தரப்பையும் மீண்டும் இணைக்கும் வகையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்து சி.வி.சண்முகம் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். தேர்தலுக்குப் பிறகு திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பான யோசனையை எடப்பாடி முன்வைத்ததாக சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியிருந்தார். அதிமுகவின் அடிப்படைக் கொள்கைக்கு இது எதிரானது என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், தேர்தலுக்கு முன்பு தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருந்ததாகவும், அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி பலரை கட்சியிலிருந்து நீக்கியதையே செய்ததாக சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு அதிமுக தேர்தல்களில் தொடர் பின்னடைவை சந்தித்ததாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எடப்பாடி தரப்பிலிருந்தும் கடுமையான பதில்கள் வந்தன. குறிப்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஆதரித்து சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார். ஒரு கட்டத்தில் சி.வி.சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து அவர் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். [Oneindia Tamil]
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் எடப்பாடி பழனிசாமியை சி.வி.சண்முகம் நேரில் சந்திக்காதது குறித்து கேள்வி எழுந்தபோது, எஸ்.பி.வேலுமணி, தங்களுக்குள் பிரச்சனை இல்லை என்றும் கருத்து வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதே காலகட்டத்தில் சட்டப்பேரவையில் எடப்பாடிக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் பேசியதும் இரு தரப்பும் நெருங்கி வருகிறார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் சமீபத்திய இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தோல்வி குறித்து கட்சித் தலைமை சுயபரிசோதனை செய்ய வேண்டும், அனைவரின் கருத்துகளையும் கேட்டு கூட்டாக முடிவெடுக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் சி.வி.சண்முகம் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம். அனைவரையும் அரவணைத்துச் செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறார். கட்சியின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யவும் அவர் தயாராக இருக்கிறார் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

