கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு தரக்கூடாது! அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
நடப்பு சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக்கூடாது என அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதை தொடர்ந்து தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியில் நடப்பு எம்.எல்.ஏவாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். அம்மன் அர்ஜுனன் அவரது தொகுதியில் செல்வாக்கு மிக்கவாராக உள்ள நிலையில் அவருக்கு வாய்ப்பளிக்காது பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்கினால் நிச்சயம் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ள அம்மன் அர்ஜுனன் ஆதரவாளர்கள் கோவை தெற்கு பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் பதவிகளை ராஜினாமா செய்வோம் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.