செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (09:18 IST)

அதிமுக பொதுக்குழு ; சசிகலா, தினகரன் நீக்கம்? ; தீர்மானங்கள் விவரம்

இன்று கூடும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்குவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. 
 
இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பின், விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ளது. 
 
முன்னதாக, இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூர் நீதிமன்றம் நேற்று தடை விதித்து தீர்ப்பளித்தது. எனவே, இந்த கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கை விரித்து விட்டது. எனவே, இந்த கூட்டம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
 
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு, மொத்தம் 2140 பேருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அதேபோல், முதலில் நடக்கவிருக்கும் செயற்குழு கூட்டத்தில் 296 பேர் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இன்று கூடும் இந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது. நீட் தேர்வு விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளதால், அது தொடர்பான ஒரு தீர்மானமும், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.