1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (21:24 IST)

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக சார்பில் சென்னையில் நாளை நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 
அதிமுகவில் தற்போது குழப்பங்கள் நீடித்து வருவதால் அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி அணி முடிவெடுத்தது. 
 
இதனையடுத்து பொதுக்குழு வரும் 12-ஆம் தேதி (நாளை) சென்னை வானகரத்தில் கூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்றத்தை நாடினார். எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் மனுதாக்கல் செய்திருந்தர். அதனை விசாரித்த நீதிமன்றம் வெற்றிவேல் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உயர்நீதிமன்ற தீர்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். 
 
அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி, அதிமுக கூட்டத்திற்கு தடையில்லை என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார். 
 
ஏற்கனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு  தடை விதிக்க வேண்டும் என தினகரன் அணியை சேர்ந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பெங்களூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சற்று நேரத்திற்கு முன் தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.
 
நீதிமன்றங்களின் இந்த தீர்ப்புகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சென்னை வானகரத்தில் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழு கூடுமா என்கிற சந்தேகம் எழுந்தது.
 
ஆனால், வெற்றிவேல் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கிலும், சென்னை நீதிமன்றம் அதிமுக கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.