வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (12:42 IST)

அதிமுகன்னா அஞ்சு தொகுதி.. பாஜகன்னா பத்து தொகுதி! – எக்ஸ்ட்ரா கேட்கும் கட்சிகளால் தொங்கலில் கூட்டணி?

DMDK PMK
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்க சில நாட்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கியமான சில கட்சிகள் குழப்பமான முடிவிலேயே உள்ளன.



மக்களவை தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரமும் அதற்கேற்றபடி சூடுபிடித்து வருகிறது. மாநில, தேசிய கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமாக நடந்து வருகின்றன. திமுக தரப்பில் தோழமை கட்சிகளோடு எந்த சிக்கலும் இல்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததன் விளைவாக கூட்டணியில் இருந்த மற்ற சிறிய கட்சிகளை கவர்வது குறித்து இரு கட்சிகள் இடையேயும் போட்டிகள் வலுவாக உள்ளன.

முக்கியமாக பாமக, தேமுதிக கட்சிகளை கூட்டணிக்கு இணங்க வைப்பது பெரும் முயற்சியாக இருந்து வருகிறது. தேமுதிகவை பொறுத்தவரை தொகுதி பங்கீட்டில் கூடுதல், குறைவு இருந்தாலும், மாநிலங்களவை எம்.பி சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக உள்ளார்.

பாமகவை பொறுத்தவரை அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக சென்றவர் என்பதால் மீண்டும் ஒரு மாநிலங்களவை எம்.பி + தங்களுக்கு ஆதரவு அதிகம் உள்ள வடக்கு மாவட்டங்களின் தொகுதிகள் என்பது டிமாண்டாக இருந்து வருகிறது.


அதிமுகவை பொறுத்தவரை 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் வேரூன்றிய கட்சி என்பதால் தொண்டர்கள், பூத் கமிட்டி என எல்லாவற்றிலும் வலிமையாக உள்ளது. அதனால் அதிமுகவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் முடிந்த அளவு தொகுதிகளை குறைக்கவே அதிமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் வெற்றிப்பெற்றதை தவிர வலிமையான வாக்கு வங்கியை காட்டியிராததால் அதிமுகவிடம் கேட்கும் தொகுதிகளை விட டபுள் மடங்காகதான் பாஜகவிடம் டிமாண்ட் செய்யப்படுகிறதாம். அவ்வளவு தொகுதிகள் கொடுத்தால் தங்கள் வலிமையை காட்டமுடியாதே என கையை பிசைகிறதாம் பாஜக தரப்பு.

முன்னதாக பாமக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது குறிப்பிட்ட தொகுதிகளையும், மேல்சபை பதவியையும் பாமக கோரியுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் தொகுதிகளுக்கு ஓகே, ஆனால் மேல்சபை பதவியை வழங்க இயலாது என மறுத்துவிட்டதாக தகவல். ஆனால் அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓரளவு சுமூக நிலை நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. தேமுதிகவும் அதிமுகவுடனான 3வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

தேமுதிக, பாமக கட்சிகள் எந்த கூட்டணியில் இணைய உள்ளது என்பதை பொறுத்து அந்தந்த கட்சிகளின் பலம் குறிப்பிட்ட செல்வாக்குமிக்க தொகுதிகளில் அதிகரிக்கலாம் என்பதால், அவர்களது கூட்டணி குறித்த முடிவு அரசியல் சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.

Edit by Prasanth.K