1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (08:05 IST)

இன்று அதிமுக, நாளை திமுக: சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்!

நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன 
 
இந்த நிலையில் இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மையம் மற்றும் அமமுக உட்பட ஒரு சில அரசியல் கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாக தயாராகி வருகின்றனர் 
 
 
இந்தநிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை அதிமுக பெற்று வருகிறது. இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நாளை வேட்பாளர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
 
இதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என திமுக தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்தன. இன்னும் ஓரிரு நாளில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பதை அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது 
 
 
மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால் இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் சூடுபிடித்து விட்டது என்பதையே அரசியல் கட்சிகளின் நிலைகள் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது