செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (11:44 IST)

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: திமுக, அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளே சந்திக்க தயாராகி வருகின்றன. இரு கூட்டணியிலும் இல்லாத அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துவிட்டன
 
 
இந்த நிலையில் திமுக, அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தற்போது தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மதிமுக ஆதரவு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அதேபோல் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் திமுகவுக்கு ஆதரவு என விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
இதேபோல் இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தமாக முழு ஆதரவு அளித்து அவர்களின் வெற்றிக்கு உறுதியோடு களப்பணியாற்றும் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதேபோல் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளன
 
 
திமுகவை பொருத்தவரை இந்த இடைத்தேர்தல் ஒரு தன்மான பிரச்சனை ஆகும். விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுமே திமுக கூட்டணியிடம் இருந்த தொகுதிகள் என்பதால் இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, தங்களது செல்வாக்கை நிரூபிக்க இந்த தேர்தலை பயன்படுத்தும் என தெரிகிறது