தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து கொண்ட மாமியார் - மருமகன்.. எதிரெதிர் துருவத்திலும் சுவாரஸ்யம்..!
தேர்தல் அலுவலகத்திற்கு ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வந்திருந்த போது பாஜகவை சேர்ந்த அவரது மாமியாரும் அதே அலுவலகத்துக்கு வந்த போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் தனக்கு 600 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் ஆற்றல் அசோக் குமார் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது மாமியார்தான் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்றல் அசோக்குமார் பாஜகவில் இருந்த நிலையில் சமீபத்தில் தான் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் என்பதும் மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பாஜகவில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு ஒரு விஷயமாக ஆற்றல் அசோக்குமார் வந்திருந்தபோது அங்கு அவரது மாமியார் சரஸ்வதியும் வந்திருந்தார். பாஜக கூட்டணி கட்சி தமாக வேட்பாளர் உடன் சரஸ்வதி வந்திருந்த நிலையில் மாமியார் மருமகன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இருவரும் நலம் விசாரித்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அரசியலில் எதிரெதிர் துருவமாக இருந்தாலும் மாமியார் மருமகன் என்பதால் ஆற்றல் அசோக்குமாருக்கு எனது வாழ்த்துக்களை சரஸ்வதி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva