1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (10:44 IST)

திமுக ஆளுங்கட்சியாக இருந்தா ஒரு பேச்சு.. எதிர்கட்சியா இருந்தா ஒரு பேச்சு! – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி :


 
தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது எனவும்,அரசின் தனி தீர்மானமான, ஆளுநர் 10 சட்ட முன் வடிவுகளுக்கு  அனுமதி வழங்காமல்  இருப்பதாக  அதில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது  எனவும் தெரிவித்தார்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய பெரும்பாலான சட்ட முன்வடிவுகள் வேந்தர் நியமனம் குறித்ததுதான் எனவும்,அவையில் நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு அனுப்பி அனுமதி அளிக்காததால் இது குறித்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது நடந்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

வழக்கு நிலுவையில்  இருக்கும் போது அவசர அவசரமாக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், சட்ட முன்வடிவுகளை மறு ஆய்வுக்கு எடுத்து கொள்ள இந்த தனிதீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், இது குறித்து சட்டமன்றத்தில் எங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றோம் எனவும் கூறினார்.

ஆளுநர் சட்ட முன்வடிவிற்கு அனுமதி வழங்காமல் இருப்பதை சுட்டிகாட்டி வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில்,சிறப்பு சட்டமன்றத்தில்  விவாதம் நடத்த என்ன காரணம்? என கேள்வி எழுப்பிய அவர், இதற்கு முறையான பதில் சட்டமன்றத்தில் கிடைக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

சட்டமுன்வடிவுகள் குறித்து நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், ஏன் அவசர அவசரமாக சட்டமன்றத்தை கூட்டி இருக்கின்றனர்? என கேள்வி எழுப்பிய அவர், சுயலாபத்திற்காக இந்த சட்ட முன்வடிவானது திமுக அரசால்  கொண்டு வரப்பட்டு இருக்கின்றது எனவும், உச்ச நீதிமன்ற  தீர்ப்பு வந்தால் இந்த கூட்டமே  அவசியம் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

1994 ஜனவரி மாதம் இதே கோரிக்கைக்காக அதிமுக அரசால் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டபோது திமுக என்ன நிலைப்பாடு எடுத்தது ? என கேள்வி எழுப்பியதுடன், அப்போது துணை வேந்தர் நியமனம் தொடர்பான சட்ட முன்வடிவு குறித்து பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி ஆகியோர் பேசி இருக்கின்றனர் எனவும்,

Edappadi Sad


அனைத்து பல்கலைகழகத்திலும் துணைவேந்தர் நியமனம் அரசால் செய்வது என்பது  ஜனநாயகத்தில்  ஏற்றுகொள்ள கூடிய நல்ல நோக்கமல்ல எனவும் திமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன்  தெரிவித்துள்ளார் எனவும், திமுக தலைவர் நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் 511 வது பக்கத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான  கருத்தை தெரிவித்துள்ளார் எனவும், அதில் குடியரசு தலைவர் ஆட்சி நடந்தால் யார் வேந்தராக இருப்பார் என்றும் கலைஞர் எழுதியிருக்கிறார் எனவும் சுட்டிக்காட்டினார்.

சட்ட முன்வடிவுகள் குறித்து  ஆளும்கட்சியாக  ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக ஒரு நிலைப்பாடு என்று இருக்கும் கட்சி திமுக  என தெரிவித்த அவர், துணைவேந்தர் நியமனம் குறித்து அதிமுக சட்டம் கொண்டு வந்த அன்றைக்கே ஏற்றுக்கொண்டு இருந்தால் இன்று இந்த பி்ச்சினை வந்திருக்காது எனவும், 29 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்ட முடிவை கொண்டு வர முயன்றது அதிமுக  எனவும் தெரிவித்தார்.

இப்போது இருக்கின்ற பிரச்சினை, துணைவேந்தர் நியமனம் குறித்து மாநில அரசு நியமனம் செய்பவர்களை ஆளுநர் ஏற்கவில்லை என்பதுதான் எனவும், ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இது தீர்மானம் கொண்டு  வரப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

திருவண்ணாமலை  மாவட்டத்தில் சிப்காட் அமைக்க, விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது எனவும், அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை பழிவாங்கும் விதமாக இந்த அரசு செயல்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தார்கள், அதிமுக அறிக்கை கொடுத்த பின்  6 பேர் மீது குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், திருவண்ணாமலையில் அதிமுக ஆட்சியில்  1163 ஏக்கர் தரிசு நிலங்களை எடுத்து சிப்காட் அமைக்கப்பட்டது எனவும்,தொழிப்பேட்டைக்கு புறம்போக்கு  நிலங்களை எடுத்து சிப்காட் அமைக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது என குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகம் குறித்து பேசிய போது தொலைக்காட்சி நேரலை இணைப்புகள் துண்டிக்கபட்டது எனவும் தெரிவித்தார்.