1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (07:38 IST)

அனுமதியின்றி கூட்டம் நடத்திய விவகாரம்: முக ஸ்டாலின் மீது வழக்கு

திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களாக வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று ஆம்பூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஒரு கூட்டம் நடத்தியதாக தெரிகிறது. அந்த கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுடன் அவர் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்த கூட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக கூறி தேர்தல் ஆணையம் அந்த திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் வேலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் அனுமதியின்றி ஒரு மண்டபத்தில் கூட்டம் நடத்தியது தவறு என திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது. இந்த கூட்டத்தில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் கலந்து கொண்டிருப்பதால் இதனை பிரச்சார கூட்டமாகத்தான் கருத முடியும் என்றும், வெறும் ஆலோசனை கூட்டம் என்று திமுக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது
 
இந்த நிலையில் அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டாட்சியர் சுஜாதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் காவல் நிலைய காவல் துறை அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து விரைவில் காவல்துறையினர் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறிய போது 'அந்தக் கூட்டம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அல்ல என்றும் வாக்கு சேகரிக்கும் கூட்டம் அல்ல என்றும் வேலூரில் உள்ள பிரச்சனைகள் குறித்து அப்பகுதி மக்களிடம் செய்த ஒரு கலந்துரையாடல் என்றும், எந்தவித நோக்கமும் இல்லாமல் நடந்த ஒரு வெளிப்படையான கூட்டம் என்றும் கூறினர். மேலும் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்