பைக் மெக்கானிக்குடன் காதல்! வீட்டை மீறி கல்யாணம்! அடுத்து நடந்த கொடூரம்! – சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்!
சிவகாசியில் இளம்பெண்ணை காதலித்து கல்யாணம் செய்த பைக் மெக்கானிக்கை, பெண்ணின் சகோதரர் நடுரோட்டில் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகரை சேர்ந்தவர் கார்த்திக் பாண்டியன். இவர் சிவகாசியில் உள்ள வொர்க்ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் சிவகாசி அய்யம்பட்டியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் நந்தினியின் வீட்டில் தெரிய வர அவர்கள் காதலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இதனால் நந்தினி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கார்த்திக் பாண்டியனை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின்னர் நந்தினி சிவகாசி ரிசர்வ் லைனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தினமும் நந்தினியை கார்த்திக் பாண்டியன் தான் சூப்பர் மார்க்கெட்டில் சென்று அழைத்து வருவார்.
நேற்று இரவும் நந்தினி பணி முடிந்து வருவதற்காக கார்த்திக் பாண்டியன் வெளியே காத்திருந்த நிலையில் திடீரென கார்த்திக்கை வழிமறித்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப்போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதை கண்ட நந்தினி பதறியடித்து ஓடி வந்துள்ளார். ஆனால் தன் காதல் மனைவி முன்னரே கார்த்திக் பாண்டியன் துடிதுடித்து இறந்துள்ளார்.
சம்பவம் அறிந்து வந்த போலீஸார் கார்த்திக் பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணையும் தொடங்கினர். விசாரணையில் கொலை செய்தது நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன் மற்றும் தனபாலன் என்பதும், அவர்களுக்கு துணையாக சிவா என்பவர் வந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் அம்மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K