1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 9 ஜூலை 2016 (12:25 IST)

ராம்குமாருக்கு ஆதரவாக களம் இறங்க உள்ள 5 பேர் கொண்ட வக்கீல் டீம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஆதரவாக 5 பேர் கொண்ட வக்கீல் டீம் களம் இறங்க உள்ளதாக வக்கீல் ராமராஜ் கூறியுள்ளார்.


 
 
கடந்த மாதம் 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சுவாதியை கொன்ற குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்ட காவல் துறை ஒரு வாரத்திற்கு பின்னர் ராம்குமார் என்பவரை கைது செய்து இவர் தான் சுவாதியை கொன்றார் எனக்கூறியது.
 
ராம்குமாரை கைது செய்ய போனபோது அவர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
பின்னர் ராம்குமாருக்கு ஜாமீன் மனுதாக்கல் செய்து வாதாடினார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. இந்நிலையில் இந்த வழக்கில் அச்சுறுத்தல் வருவதாலும், அதிகமான வேலைப்பளு இருப்பதாலும் தான் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
இதனையடுத்து ராம்குமாருக்கு ஆதரவாக வக்கீல் ராமராஜ் களம் இறங்கினார். புழல் சிறைக்கு சென்று ராம்குமாரை சந்தித்து பேசிய இவர், வரும் புதன் கிழமை புதிய ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.
 
மேலும், ராம்குமாருக்கு ஆதரவாக 5 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு வாதாட உள்ளதாக ராமராஜ் கூறினார். மேலும் இந்த வழக்கறிஞர் குழுவில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு உள்ளிட்டோரும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.