வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (15:48 IST)

”பாராளுமன்ற புலி”யின் கர்ஜனை – ராஜ்யசபாவில் வைகோ

40 வருடங்கள் கழித்து ராஜ்ய சபாவுக்குள் ரீ எண்ட்ரி கொடுக்க போகிறார் வைகோ. 30ம் தேதி நடைபெறும் ம.தி.மு.க உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் வைகோ. மக்களவையிலும், ராஜ்ய சபாவிலும் இவர் பேசுவதை கேட்க ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாரபட்சமில்லாமல் ஆர்வமாய் காத்திருப்பார்கள். அந்தளவுக்கு கோர்வையாக, திருத்தமாக, புள்ளி விவரங்களுடன் பேச கூடியவர். சமீபத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வைகோ பேசிய அனல் தெறிக்கும் பேச்சுகளை ஊடகங்கள் செய்தியாக்கின.

1978ல் முதன்முறையாக ராஜ்யசபாவில் நுழைந்தார் வைகோ. பிறகு மக்களவையில் இரண்டு முறை எம்.பி-யாக இருந்துள்ளார். அப்போது மக்களவையில் அவருடைய அனல்தெறிக்கும் பேச்சுக்காகவே அவரை “பாராளுமன்ற புலி” (Tiger of Parliament) என்று அழைப்பார்கள். அதற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியோடு ஏற்பட்ட கருத்து மோதலால் 1993ல் திமுகவை விட்டு பிரிந்து ம.தி.மு.க கட்சியை தொடங்கினார்.

தற்போது நடந்த மக்களவை தொகுதியில் திமுகவோடு கூட்டணி அமைத்த வைகோ இரண்டு இடங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. திமுக ஒரு இடம் தந்ததாகவும் ராஜ்யசபாவில் ஒரு இடம் ஏற்படுத்தி தருவதாக வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது திமுக தரப்பிலிருந்து 3 ராஜ்யசபா உறுப்பினர்கள் செல்ல முடியும் என்பதால் அதில் ஒருவராக வைகோ கண்டிப்பாக இருப்பார் என கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து ராஜ்யசபாவில் நுழையும் “பாராளுமன்ற புலி” என்ன செய்ய போகிறது என காண அரசியல் ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். எனினும் இதன் அதிகாரப்பூர்வமான முடிவு 30ம் தேதிக்கு மேல்தான் தெரிய வரும்.