வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (08:44 IST)

9ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு: 11 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது
 
திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி - மகேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகளான 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி கங்காதேவி நேற்று மாலை ஊருக்கு வெளியே தீயில் எரிந்த சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
9ஆம் வகுப்பு மாணவி இறந்த இடத்திற்கு அருகே தீப்பெட்டி மற்றும் மண்ணெண்ணெய் கேன் இருந்ததாகவும், அதனை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் தற்போது திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு கொலை நடந்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது