யமுனையின் சாபத்தால் தோல்வி: ராஜினாமா செய்ய வந்த அதிஷியிடம் கூறிய கவர்னர்?
யமுனையின் சாபத்தால் தான் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது என ராஜினாமா செய்ய வந்த டெல்லி முதல்வர் அதிஷியிடம் டெல்லி கவர்னர் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது என்பதும், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், தேர்தலில் தோல்வி காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கவர்னரிடம் அதிஷி சென்றபோது, " யமுனை அன்னையின் சாபத்தால் தான் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது" என அதிஷியிடம் கவர்னர் சக்சேனா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு "யமுனை நதியை சுத்தம் செய்வோம்" என்று வாக்குறுதி அளித்து தான் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது இதனை பாஜக தீவிரமாக சுட்டிக்காட்டியது என்பதும், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யமுனை நதியை தூய்மைப்படுத்துவோம்" என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, "யமுனை நதியில் சாத் பூஜை நடைபெறும், பக்தர்கள் புனித நீராடலாம்" என்றும் கூறியது தான் பாஜகவின் வெற்றிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வந்த அதிஷியிடம் "யமுனை சாபத்தால் தான் தோல்வி அடைந்தது" என கவர்னர் கூறியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva