ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (22:07 IST)

2.0 வெளியாகும் தியேட்டர்கள் முன் போராட்டம்: சொன்னது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் '2.0' வெளியாகும் திரையரங்குகளின் முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதனால் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தமிழ் மொழி படங்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதாகவும், இதனால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனை கண்டித்து ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வெளியானபோது இதே வாட்டாள் நாகராஜ் அந்த படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார் என்பதும் அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.