உஷார்.. வருகிறது இரண்டாவது அலை கொரோனா! – முதல்வர் எச்சரிக்கை!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்கி வரும் சூழலில் இரண்டாம் அலை கொரோனா பரவல் உருவாக வாய்ப்பிருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிரா இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 13 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் விரைவில் தொடங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளால் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதேபோல மகாராஷ்டிராவிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் பலர் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி வருவதால் இரண்டாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.