தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!
தமிழகத்தில் இன்றும் நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஆனால் அதே சமயத்தில் மற்ற பகுதிகளில் வெயில் கொளுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு பகுதியில் மற்றும் கிழக்கு-மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, குமரி கடல் பகுதியில் இருந்து தென் தமிழகத்தை நோக்கி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் சில பகுதிகளில் கனமழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
ஆனால் அதே நேரத்தில், மார்ச் 23 வரை தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிக வெப்பநிலை நிலவும். சென்னையில், அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில், அதிகபட்சமாக 33°C வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran