வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (19:37 IST)

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது: குமாரசாமியின் ஆட்சி கவிழுமா? நீடிக்குமா?

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் சிலர் ராஜினாமா செய்ததால் பெரும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னுடைய பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரியதை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் நடத்த வேண்டும் என்று கடந்த வாரமே சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
 
ஆனால் ஒருசில அமளிதுமளி மற்றும் பிரச்சனைகளால் நேற்றுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனையடுத்து இன்று மாலைக்குள் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் இன்று மதியம் தொடங்கியது. இந்த விவாதம் சற்றுமுன் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது
 
சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், வாக்கெடுப்புக்கான மணி அடிக்கப்பட்டு அவையின் கதவு மூடப்பட்டு, வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஒருசில நிமிடங்களில் வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளை பொறுத்தே குமாரசாமியின் அரசு நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது தெரியவரும்