ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

சுஷ்மா ஸ்வராஜ் ஆந்திர கவர்னர் என்பது உண்மையா?

கடந்த ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த முறை உடல்நிலை காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று அனைவரும் நினைத்த நிலையில் தற்போது அவர் ஆந்திர மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டதாக நேற்று இரவு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின
 
தற்போது ஆந்திர மாநில கவர்னராக இருந்து வரும் நரசிம்மன் அவர்கள், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுவதால் இன்றைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க கவர்னர் மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குகள் தொடர திட்டமிட்டிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் கவர்னர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இந்த நிலையில் ஆந்திர மாநில கவர்னராக தான் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்றும், நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தன்னை அழைத்து, தான் வகித்து வந்த வெளியுறவுத்துறை அமைச்சகம் குறித்து சில விளக்கங்கள் கேட்டார் என்றும், அதை வைத்து கவர்னர் பதவி என்ற கதையை டுவிட்டரில் உள்ளவர்கள் கட்டிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.