ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 15 ஜூலை 2024 (15:14 IST)

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, சொமேட்டோ.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Swiggy Zomato
உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகியவை மீண்டும் தங்கள் பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற முக்கிய இலக்கு இருக்கும் காரணத்தால் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி வருகிறது.
 
அதன்படி இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ, ஒவ்வொரு முறை உணவு வாங்கும் போது பயனாளர்களிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ.6 ஆக உயர்த்தியுள்ளன. இதன்மூலம் 20% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போது டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
 
பயன்பாட்டுக் கட்டணம் என்பது விநியோகக் கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி, உணவகக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. உயர்த்தப்பட்ட பயன்பாட்டுக் கட்டணம் மற்ற நகரங்களிலும் நடைமுறைப்படுத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இணையவழி உணவு விநியோக நிறுவனங்கள் பயன்பாட்டுக் கட்டணத்தின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பிளாட்பார்ம் கட்டணத்தை முதல் முறையாக ஸ்விக்கி திருமணம் கடந்தாண்டு ஏப்ரல் 2023-ல் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தியது.


இதைத் தொடர்ந்து அதே வருடம் ஆகஸ்ட் மாதம் சொமேட்டோ அறிமுகம் செய்தது. அதிலிருந்து, இரு நிறுவனங்களும் மாறி மாறி கட்டணத்தை உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.