செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (19:41 IST)

தடை இல்லை; ஆனால் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி

பொருளாதார ரீதியான் 10 % இட ஒதுக்கீட்டினை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்த உள்ள நிலையில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசிடம் பதில் கேட்டுள்ளது.

இந்தியாவில் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. மத்திய அரசுத் துறைகளில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாதி ரீதியாக இல்லாமல் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை மோடித் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதற்குக் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சி போன்ற தேசியக் கட்சிகளிடம் ஆதரவுக் கிடைத்துள்ளது. ஆனால் மாநிலக் கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. திமுக மற்றும் அதிமுக எம்.பி.கள் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். ஆனால் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையிலும் மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கூறி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ல நோட்டீஸில் இந்த சட்டதிருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.

இந்த சட்டத்தை பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் அமல்படுத்த சொல்லி உத்தரவிட்டுள்ள நிலையில் இச்சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.