செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (18:19 IST)

கோவா கடற்கரையில் இனி சரக்குக் கிடையாது – சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி !

இனி கோவா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் உணவு சமைக்கவோ மது அருந்தவோ தடை விதிக்க இருக்கிறது கோவா மாநில அரசு.

இந்தியாவில் சுற்றுலாத் தளங்களில் மிக முக்கியமானது கோவாக் கடற்கரை. இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கோவாவை அதிகம் விரும்ப இயற்கை அழகுடன் ஒரு காரணம் என்றாலும் மலிவான உயர்ரக மதுபான வகைகளும் ஒரு காரணம். ஆனால் இவையின்றி அங்கு போதைப்பொருட்களும் விபச்சாரம் போன்ற சட்டவிரோத செயல்களும் நடந்த் வருகின்றன.

பயணிகளால் கோவாக் கடற்கரை அதிகளவில் மாசடைவதாகவும் பெண்களுக்கு அங்கு சரியானப் பாதுகாப்பு இல்லை எனவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் கோவா கடற்கரைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அம்மாநில பாஜக கூட்டணி அரசு.

இது சம்மந்தமாக நேற்று (ஜனவரி 24) புதிய சட்டமொன்றை இயற்றி அதற்கு கோவா மாநில அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. இந்த சட்டத்தின் படி, “இனி கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவெளியில் மது அருந்தக் கூடாது.மது பாட்டில்களை உடைக்கக் கூடாது. திறந்தவெளியில் உணவு சமைக்கக் கூடாது. இந்தத் தடையை மீறுவோருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என வரையறுக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறுவோர்க்கு 3 மாத சிறைதண்டனையும் தவறினை ஒன்றிற்கு மேற்பட்டோர் செய்யும்போது 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவாக் கடற்கரைகள் சுத்தமாகும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் கோவாவுக்கு சுற்றுலாப்பயணிகள் மூலம் வரும் வருவாய் குறையும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.