தேர்தலில் வெற்றி பெறவே ராமர் பெயரை பயன்படுத்திய பாஜக; சிவசேனா குற்றச்சாட்டு
ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனக்கூறி பாஜக அரசியல் செய்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமர் கூறவில்லை என்றும் சிவசேனா பாஜகவை கடுமையாக சாடியுள்ளது.
சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரேந்திர சிங், நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை ராமராலும் கூட தடுக்க முடியாது என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கணடனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாட்டில் பாஜக எவ்வாறு ராம ராஜ்ஜியம் அமைக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்காமல், ராமராலும் கூட இதனை தடுக்க முடியாது என பாஜக கூறி வருவதாக விமர்சித்துள்ளது. நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் மாறவில்லை. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போய் உள்ளது. இந்நிலையில் ராம ராஜ்ஜியம் எவ்வாறு அமைக்கப்படும்?
ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் என்று கூறி பாஜக அரசியல் செய்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமர் கூறவில்லை எனவும் சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.