வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (16:27 IST)

இந்தியா அவமதித்த கனடா பிரதமரை தமிழகம் விருந்துக்கு அழைக்க வேண்டும். சீமான்

இந்தியாவுக்கு எட்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களை இதுவரை பிரதமர் மோடி நேரில் சந்திக்கவில்லை. டுவிட்டரில் கூட ஒரு வரவேற்பு டுவீட் பதிவு செய்யவில்லை. தமிழர் திருநாளான பொங்கலுக்கு தேசிய விடுமுறை, இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் என தமிழர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள கனடா நாட்டின் பிரதமரை இந்தியா திட்டமிட்டு அவமதிப்பதாகவும், இதற்கு பரிகாரம் செய்யும் வகையில் தமிழக அரசு கனடா பிரதமரை விருந்தாளியாக அழைத்து கெளரவிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
`எட்டு நாள்கள் சுற்றுப்பயணமாகக் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு உரிய மரியாதை அளித்திராது அவரைப் புறக்கணித்து அவமதிக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்துக்குரியதாகும். மத்தியில் ஆளும் மோடி அரசின் தேவையற்ற இவ்வணுகுமுறையால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையிலான கருத்துருவாக்கங்கள் உருவாகி கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பிறிதொரு நாட்டின் தலைவர் இந்நாட்டுக்கு வருகைபுரியும்போது அவரை இந்நாட்டின் தலைவர் நேரில் சென்று வரவேற்று உபசரிப்பது என்பது ஓர் பொதுப்பண்பாடு; காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் நாகரிக மாண்பாகும். மேலும், பிறிதொரு நாட்டோடு நல்லுறவைப் பேணவும் அந்நாட்டை எவ்வகையில் மதித்துப் போற்றுகிறோம் என்பதைக் காட்டவும் இந்நாட்டுக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகவுமே சர்வதேச அரசியல் அரங்கங்கள் அதைக் கணக்கிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை நேரில் சென்று வரவேற்காது புறக்கணித்ததோடு மட்டுமல்லாது அவ்வரவேற்பு நிகழ்வுக்கு ஒரு கேபினட் அமைச்சரைக்கூட அனுப்பாதது வேளாண்துறை இணை அமைச்சரான கஜேந்திர சிங்கை அனுப்பியது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.
 
அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த பராக் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபு தாபி முடி இளவரசர் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் ஆகியோரின் இந்திய வருகையின்போது தானே நேரில் சென்று கட்டித்தழுவி வரவேற்று உபசரித்த பிரதமர் மோடி,  கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வருகையின்போது மட்டும் ஏன் இத்தகையப் போக்கைக் கடைப்பிடிக்கிறார் என்பது விந்தையாக இருக்கிறது. மேலும், அவரை வரவேற்று ஒரு வாழ்த்துச்செய்திகூட இதுவரை ட்விட்டர் தளத்தில் வெளியிடப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு கனடா பிரதமர் சென்றபோதும் அந்த மாநிலத்தின் முதல்வர் ஆதித்யநாத் யோகி அவரைச் சந்திக்கவில்லை என்பதிலிருந்து இவையாவும் திட்டமிட்டப் புறக்கணிப்பு வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இதனால், கனடா நாட்டு ஊடகங்கள் இந்திய நாட்டுக்குத் தனது கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்து வருகின்றன. இந்தியாவில் வாழுகிற பெருத்தத் தேசிய இன மக்களான தமிழர்களுக்கும் சீக்கியர்களுக்கும் ஆதரவளித்து பெருமளவு முக்கியத்துவம் அளித்து வரும் கனடா நாட்டின் செயல்பாடுகளே இந்திய அரசின் இத்தகையப் புறக்கணிப்புக்குக் காரணம் என்பது வெளிப்படையானது.
 
தமிழர்களின் தேசியத் திருநாளாக இருக்கிற பொங்கல் பெருவிழாவுக்கு அரசு விடுமுறை அளித்ததோடு அந்த மாதத்தைத் தமிழ் பாரம்பர்ய மாதமாக அறிவித்துத் தமிழர்களுக்குப் பெருமிதம் சேர்த்தது கனடா நாடு என்பது அந்த நாடு தமிழர்களுக்கு வழங்கியிருக்கும் முதன்மைத்துவத்தைப் பறைசாற்றும். மேலும், ஆண்டுதோறும் பொங்கல் பெருவிழா அன்று தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி சட்டை அணிந்து தனது குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தமிழிலே தெரிவித்து தமிழர்களை உள்ளம் பூரிப்படையச் செய்து பெருமைப்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாது கனடா நாட்டின் 150 வது விடுதலைத்திருநாளை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழிலும் வெளியிட்டு இந்திய நாடுகூட அளித்திட முன்வராத பெரும் அங்கீகாரத்தைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது கனடா நாடு.
 
தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரவளித்ததோடு மட்டுமல்லாது உயரிய அங்கீகாரத்தைத் தந்து தமிழர் அடையாளங்களையும் விழாக்களையும் போற்றும் வகையில் நடத்தும் கனடா நாட்டினுடைய பிரதமரைப் பெருமைப்படுத்தி கௌரவிக்க வேண்டியது 10 கோடித் தமிழ்த்தேசிய இன மக்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழக அரசினுடைய தலையாயக் கடமையாகும். ஆகவே, இந்தியா வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தமிழகத்துக்கு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பது தமிழ்த்தேசிய இன மக்களின் அவா. இது தமிழர்களுக்கு கனடா நாடு அளித்து வரும் முன்னுரிமைக்காகவும் முக்கியத்துவத்துக்காகவும் நன்றிப்பெருக்கோடு தமிழர்கள் திரும்பச் செய்கிற விரும்தோம்பலாக இருக்கட்டும் என அறிவுறுத்துகிறேன். ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து அவரை விருந்தினராகத் தமிழகத்துக்கு அழைத்து விருந்தோம்பல் செய்து பெருமைப்படுத்த வேண்டும்'' 
 
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.