போராட்டம் நடத்த வெளிநாட்டில் இருந்து பணம்: சுப.உதயகுமாரின் முகத்திரையை கிழித்த ரிபப்ளிக் டிவி
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கடந்த சில வருடங்களாக போராடி கொண்டிருந்த சுப.உதயகுமார், போராட்டம் நடத்த மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பணம் பெற்றதை ரகசிய வீடியோ எடுத்து ரிபப்ளிக் டிவி அம்பலப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அப்பாவி மக்களை போராட்டம் என்ற பெயரில் ஏமாற்றி வந்துள்ளதாக சுப.உதயகுமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
தமிழகம் உள்பட இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் திட்டங்களில் ஒன்று கூடங்குளம் அணுமின் நிலையம். இந்த மின் நிலையம் இயங்க தொடங்கியதில் இருந்துதான் தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. ஆனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கு ஆபத்து என்று பொதுமக்களிடம் பொய்யான தகவலை பரப்பி சுப.உதயகுமார் போராட்டம் நடத்தி வந்தார். இவர் வெளிநாட்டினரிடம் பணம் வாங்கிக்கொண்டு தான் போராட்டம் நடத்துவதாக அப்போதே குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. மேற்கத்திய நாட்டினரிடம் இருந்து சுப.உதயகுமார் பணம் பெறுவதை ரிபப்ளிக் டிவி ரகசிய வீடியோ எடுத்து அவருடைய பொய்முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துவருகிறது.