இன்னும் எத்தனை மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர்? – ராகுல்காந்தி கேள்வி!
உக்ரைன் போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் குறித்து வெளிப்படையான தகவலை அளிக்க வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று உக்ரைனில் ரஷ்யா நடத்திய குண்டு வீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க மத்திய அரசு சில தகவல்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும். எத்தனை மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் உக்ரைனில் சிக்கியுள்ளனர்? மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் மக்களை வெளியேற்றுவதற்கான விரிவான திட்டமிடல்கள். அவர்களது குடும்பத்திற்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டியது நமது பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.