ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:33 IST)

நேரு ஆட்சியில் விலைவாசி உயர்வு..! காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்க விட்ட பிரதமர்..! 370 தொகுதிகளில் பாஜக வெல்லும்..!!

modi
மக்களவை தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என்றும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, நீண்ட காலம் எதிர்கட்சியாக இருக்க வேண்டும் என்ற உறுதியை பாராட்டுவதாக எதிர்க்கட்சிகளை கிண்டல் அடித்தார். காங்கிரஸ் கட்சியின் ஆமை வேகத்துக்கு யாரும் போட்டியில்லை என தெரிவித்த பிரதமர் மோடி, தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதரமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
நாட்டின் 140 கோடி மக்களின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
காலனி ஆதிக்கத்தின் பாதிப்பில் இருந்து மக்களை மீட்டுள்ளதாகவும், காலணி காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களை நீக்கி புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
 
bjp modi
நாட்டின் எல்லைப் பகுதி மக்கள் வரை, அரசியல் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடைந்துள்ளன என்றும் காஷ்மீர் முதல் குமரி வரை பாஜக என்ன சாதித்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினருக்கு ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இல்லாத போது, மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது என்று கடுமையாக விமர்சித்தார்.
 
nehru
நேருவின் 12 கால ஆட்சியின் போது விலைவாசி உயர்ந்து கொண்டே சென்றது என்றும் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது விலைவாசி 30 சதவீதம் உயர்ந்து இருந்தது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் விலைவாசி உயர்வு ஏற்படும் என்று அவர் விமர்சித்தார்.
 
விலைவாசி உயர்வையை பாஜக கட்டுக்குள் வைத்திருக்கிறது என தெரிவித்த பிரதமர் மோடி, தற்போது பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றும் வளர்ச்சிதான் பாஜக அரசின் தாரக மந்திரம் என்றும் பிரதமர் கூறினார்.
 
மகளிர் சக்தியை உணர்ந்து பாஜக பல  திட்டங்களை வகுத்து வருகிறது என தெரிவித்த பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் மூன்று கோடி பெண் லட்சாதிபதி ஆகி உள்ளனர் என்றும் கூறினார்.
 
pilot
மேலும் கிராமப்புற பொருளாதாரத்தில் பெண்கள் புதிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் பெண்கள் போர் விமானங்களை இயக்கி நாட்டை பாதுகாக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். விண்வெளி துறையில் இருந்து விளையாட்டு துறை வரை பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்றும் நாட்டை கொள்ளை அடிக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டு வருவேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.