ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (12:45 IST)

திருட போன இடத்தில் ரவுண்டு கட்டிய மக்கள்! போலீஸை உதவிக்கு அழைத்த திருடர்கள்!

ராஜஸ்தானில் ஒரு வீட்டுக்குள் திருட சென்ற திருடர்கள் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டதால் போலீஸுக்கு போன் செய்த சம்பவம் நடந்துள்ளது.

 

 

நாடு முழுவதும் நாள்தோறும் பல திருட்டு சம்பவங்கள் நடைபெறும் நிலையில், சிலசமயம் திருடர்கள் திருட சென்ற வீட்டிலேயே தூங்கி மாட்டிக் கொள்வது போன்ற விதவிதமான சம்பவங்களும் அவ்வபோது நடக்கின்றன. அதுபோன்றதொரு விநோத சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலம் கோலாயம் பகுதியில் வசித்து வருபவர் மதன் பரீக். கடந்த வியாழக்கிழமை அன்று மதன் பரீக் சில தெருக்கள் தள்ளி உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு 2 மணியளவில் மதன் பரீக் வீட்டிற்குள் இரண்டு திருடர்கள் நுழைந்துள்ளனர். வீட்டு முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் அங்கிருந்த பணம், நகையை கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர்.
 

 

அந்த சமயம் தனது அண்ணன் வீட்டிலிருந்து திரும்பி வந்த மதன் பரீக் வீட்டு முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டதும், ‘திருடர்கள்.. திருடர்கள்’ என கத்த, உடனடியாக அக்கம்பக்கத்தினர் மதன் பரீக் வீட்டை சூழ்ந்து கொண்டனர். இதனால் திருடர்கள் வீட்டை உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

 

பொதுமக்களிடம் சிக்கினால் அடித்து துவைத்து விடுவார்கள் என பயந்த அவர்கள், காவல் நிலையத்திற்கு போன் செய்து தங்களை காப்பாற்றுமாறு கேட்டுள்ளனர். அங்கு விரைந்த போலீஸார் அந்த திருடர்களை பிடித்து கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். பொதுமக்களின் தர்ம அடியிலிருந்து தப்பிக்க திருடர்களே காவல் நிலையத்திற்கு போன் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K