151 எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள்.! 16 பேர் மீது பாலியல் புகார்.! அதிர்ச்சி ரிப்போர்ட்.!!
தற்போது பதவியில் இருக்கும் 151 எம்பி, எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாக ஏடிஆர் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 முதல் 2024 வரையிலான தேர்தல்களின்போது, தற்போது எம்.பி., எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த 4,809 பிரமாணப் பத்திரங்களில் 4,693 பிரமாணப் பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) ஆய்வு செய்தது. அதில், 16 எம்.பி.கள், 135 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சந்தித்து வருவது தெரியவந்தது.
இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் தற்போது பதவியில் இருக்கும் 25 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 21 பேர், ஒடிசாவில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது பதவியில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களில் 16 பேர் மீது பாலியல் வன்கொடுமைத் தொடர்பான வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம் என்றும் இந்த 16 பேரில் இருவர் எம்.பி.கள், 14 பேர் எம்.எல்.ஏ.க்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்சிகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளும் எம்.பி., எம்எல்ஏக்களில் 54 உறுப்பினர்ளைக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 23 உறுப்பினர்களுடன் இரண்டாவது இடத்திலும், தெலுங்கு தேசம் கட்சி 17 உறுப்பினர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் தலா 5 உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அறிக்கையின் மூலம் வெளிப்பட்டிருக்கும் இந்த விவகாரத்துக்கு சில வலுவான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி உள்ளவர்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.